அவுஸ்திரேலியா, மெல்பேணில் நினைவு வணக்க ஒன்றுகூடல் நிகழ்வின் படத்தொகுப்பு மாமனிதர் ரவிராஜ் அவர்களையும், அண்மையில் வாகரையில் படுகொலை செய்யப்ட்ட அப்பாவித் தமிழ் மக்களையும் நினைவுகூர்ந்து இன்று (18.11.06) அவுஸ்திரேலியா, மெல்பேணில் நினைவு வணக்க ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது.விக்டோரிய தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வுடன் பங்கெடுத்தனர்.
முதலில் மாமனிதர் ரவிராஜ் அவர்களின் உறவினர்களில் ஒருவர் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார். அடுத்து அகவணக்கத்துடன் வணக்க உரைகள் ஆரம்பமாகின.
தமிழீழத்தில் பணிபுரிந்துவிட்டு அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பி வந்த வணக்கத்திற்குரிய டீக்கின் தனது உரையில், கிழக்குத் தீமோர் மக்களும் தமிழ் மக்கள் போலவே பல உயிர்த்தியாகங்களைச் செய்து தற்போது சுதந்திரம் பெற்றுள்ளனர். அதுபோலத் தமிழர்களும் விரைவில் சுதந்திரத்தை வென்றெடுப்பர் என்று உணர்வுடன் கூறினார். யாழ். பரியோவான் கல்லூரி பழைய மாணவர்கள் சார்பில் திரு யூட் பிரகாஷ் அவர்கள் மாமனிதர் ரவிராஜ் அவர்களின் பள்ளி வாழ்வின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
மெல்பேணில் வாழும் ரவிராஜ் அவர்களின் உறவினர்களில் ஒருவரான சிறி அவர்கள் ரவிராஜ் அவர்களின் பன்முகத்தன்மைகள் பற்றி எடுத்துக்கூறி அவரின் ஆத்மா சாந்தியடைய நாமும் அவர் விட்டுச்சென்ற பணியை தொடரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மாமனிதருடன் சட்டக்கல்லூரியில் பயின்ற காலத்தையும் அவருடன் கொழும்பில் வாழ்ந்த நாட்களையும் சட்டத்தரணி இராஜமனோகரன் சபையோருடன் பகிர்ந்து கொண்டார். எப்போதெல்லாம் மனித உயரிகள் பறிக்கப்ட்டதோ அப்போதெல்லாம் ரவிராஜ் குரல்கொடுத்தவர், அவர் ஒரு மனித உரிமைவாதி. அவர் மிக எளிமையான வாழ்வை வாழ்ந்து எமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றார் என்று இராஜமனோகரன் கூறினார். மேலும் விக்கிரமசிங்கம், கலாநிதி ராஜன் இராசையா, சபேசன், வணபிதா றிச்சட் வூட்டன் ஆகியோரும் தமது நினைவுரைகளை நிகழ்த்தினர்.
Courtesy: TamilNaatham |